July 15, 2026

திருப்பத்தூரில்  அம்மா உணவகம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திருப்பதி

 திருப்பத்தூர், ஜூலை.13-

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி சி.ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருப்பத்தூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு திரு. ஆர்.வி. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் நா. திருப்பதி, B.V.Sc., MLA அவர்கள் அம்மா உணவகத்தை நேரில் ஆய்வு செய்தபோது, அங்கு பணியாற்றும் பணியாளர்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை உடனடியாக சீரமைத்து வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, தேவையான அனைத்து சீரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. திருப்பதி அவர்கள், அம்மா உணவகத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

திறப்பு விழாவில், டாக்டர் நா. திருப்பதி அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து அமர்ந்து உணவருந்தி, மக்களோடு மக்களாக என்ற மக்கள் சேவை மனப்பான்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார். மேலும், ஏழை, எளிய மக்களின் அத்தியாவசியத் தேவையாக விளங்கும் அம்மா உணவகத்தின் சேவை தொடர்ந்து தரமாகவும் சிறப்பாகவும் நடைபெற வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவர் திருமதி சங்கீதா வெங்கடேசன், நகராட்சி ஆணையர், நகரக் கழகச் செயலாளர்கள், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட, நகர மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Spread the love