February 24, 2026

லாரிகளுக்கான எப்.சி கட்டணம் உயர்வு 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதால், வரும் 25ம் தேதி முதல் நடைபெற இருந்த மாநில அளவிலான லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக மாநில லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து டூ வீலர், கார், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கடந்த டிச. 17ம் தேதி முதல் தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை (எப்.சி) உயர்த்தி அறிவித்தது.

வாகனத்தின் தயாரிப்பு ஆண்டை அடிப்படையாக கொண்டு, எப்.சி. கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு தமிழகத்திலும் அவசரமாக அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பல மாநிலங்கள் இந்த கட்டண உயர்வை நிறுத்தி வைத்துள்ள நிலையில், தமிழகத்திலும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

கட்டண உயர்வை செலுத்தி எப்.சி பெற முடியாமல் மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 17ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற சம்மேளன செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தில் எப்.சி. கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி வருகிற பிப். 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் செய்வதென அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 8 மணி நேரத்திற்குள், கடந்த 17ம் தேதி தமிழக அரசு, 3 மாதங்களுக்கு எப்.சி.க்கான புதிய கட்டணம் வசூலிப்பதை தற்காலிமாக நிறுத்தி வைத்து, பழைய கட்டணமான ரூ.800 மட்டும் செலுத்தி லாரிகளுக்கு எப்.சி சான்று பெறலாம் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து கமிஷனர் மற்றும் சம்மேளன நிர்வாகிகள் அடங்கிய குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதால், அக்குழுவின் கூட்டத்தில் 3 மாத கால இடைவெளிக்குள், எப்.சி. கட்டணம் நிர்ணயிப்பது சம்மந்தமாக பேசி முடிவு செய்யலாம் என மாநில டிரான்ஸ்போர்ட் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

இதையொட்டி 25ம் தேதி முதல் நடைபெற இருந்த லாரி ஸ்டிரைக் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. லாரிகள் வழக்கம்போல் ஓடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

image.png
Spread the love