February 13, 2026

2021-25-ல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.462 கோடி செலவு!

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 43+ வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதற்காக ரூ.462.58 கோடி செலவாகி உள்ளதாக அரசு தரவுகளில் தகவல்.

இதில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4 முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கு மூன்று முறை சென்றுள்ளார். பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இரண்டு முறை சென்றுள்ளார். கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மலேசியாவுக்கு பிரதமர் மோடி சென்று வந்தது அவரது அண்மைய வெளிநாட்டு பயணமாக உள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். அந்த பயணத்துக்காக ரூ.25.5 கோடி செலவாகி உள்ளது. அந்த பயணத்தில் ஏஐ மாநாடு, பிரான்ஸ் அதிபர் ஏற்பாடு செய்த இரவு விருந்து, பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வு, பிரான்ஸின் மார்ஷைலில் தூதரகம் திறப்பு விழா நிகழ்வு உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். 2021-25 காலகட்டத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் அதிக தொகை செலவிட்டது இந்த பயணத்துக்காக தான் என தகவல்.

இதற்கு அடுத்தபடியாக அதிக செலவான பயணப் பட்டியலில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றது இடம்பெறுகிறது. அந்தப் பயணத்துக்காக ரூ.22.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் உடன் பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். மேலும், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா தின விழாவிலும் பங்கேற்றார். இதே போல கடந்த 2021 செப்டம்பரில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்காக ரூ.19.6 கோடி செலவாகி உள்ளது.

2021-25 காலகட்டத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு ஒட்டுமொத்தமாக செலவான ரூ.462.58 கோடியில் 16 சதவீதம் அமெரிக்க நாட்டு பயணத்துக்காக (4 முறை பயணம்) செலவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றும் ஜப்பான் பயணத்துக்கு தலா 9 சதவீதம் செலவாகி உள்ளது.

2021-25 வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட நாடுகள்: வங்கதேசம், அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, எகிப்து, கத்தார், பூட்டான், போலந்து, உக்ரைன், சிங்கப்பூர், புரூனே, தென் ஆப்பிரிக்கா, கிரீஸ், ரஷ்யா, ஆஸ்திரியா, லாவோஸ், நைஜீரியா, பிரேசில், கயானா, குவைத், மொரிஷியஸ், தாய்லாந்து, இலங்கை, சவூதி அரேபியா, கனடா, குரோஷியா, சைப்ரஸ், கானா, அர்ஜெண்டினா, நமீபியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, மாலத்தீவு, சீனா, ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணித்துள்ளார்.

Spread the love