வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க திட்டமிட்டிருந்த அமெரிக்கா, அதை 100% ஆக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல் ஆகியோர் ‘ரஷ்யா மீதான தடைகள் மசோதா’வை ஓராண்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் லிண்ட்சே கிரஹாம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் காலமானார்.
இந்நிலையில், இந்த இரு கட்சி மசோதாவின் திருத்தப்பட்டபதிப்பை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ளனர். இதில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீதான அசல் 500% வரி விதிப்பு முன்மொழிவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா சம்பந்தப்பட்ட நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் வழங்க வகை செய்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் 4 ஆண்டுகால போரை நிறுத்த மாஸ்கோவுக்குப் பொருளாதார ரீதியாக அழுத்தம் தருவதுதான் இந்த மசோதாவின் நோக்கம் ஆகும். ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் சீனாவும் அடங்கும். எனவே, இந்த வரி விதிப்பு அமலானால், இரு நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படலாம்.
திருத்தப்பட்ட மசோதாவில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகள் மீதான வரி அதிகபட்சம் 100% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இயற்கை எரிவாயுவை 15%-க்கும் குறைவாக இறக்குமதி செய்து, அதைத் தவிர்க்க முயற்சிக்கும் நாடுகளுக்கு (ஜப்பான், பிரான்ஸ் போன்றவை) விலக்கு அளிக்கப்படலாம்.
ரஷ்யாவின் நிழல் கப்பற்படை, மத்திய வங்கி மற்றும் யமல் எல்என்ஜி போன்ற அரசு எரிசக்தி திட்டங்கள் மீது தடைகள் விதிக்கப்படும். அமெரிக்க தேசிய நலன் கருதி அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தத் தடைகளைத் தள்ளுபடி செய்யவும் இதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்புடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள வசதியாக இந்த மசோதா தளர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மறைந்த செனட்டர் கிரஹாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மசோதா விரைவில் சட்டமாகும் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதான தடைகளையும் இதில் சேர்க்க அவர் விரும்புகிறார். எனினும், மசோதாவை மாற்றாமல் அப்படியே நிறைவேற்ற வேண்டும் என புளூமெண்டல் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய பாதுகாப்புத் துறையுடன் இணையும் ஈரான் போன்ற நாடுகளும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும் என செனட் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More Stories
உலகின் முதல் 3 வலிமையான டயர் பிராண்டுகளில் ‘எம்ஆர்எப்’
சமையல் காஸ் சிலிண்டர்களை இனி இன்ஸ்டாமார்ட் சப்ளை செய்யும் – ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ஏஐ நிறுவனப் பங்குகள் உயர்வு: அமெரிக்க பங்குச்சந்தைகள் முன்னேற்றம்