ஜோத்பூர்: கூட்டு பாலியல் வன்கொடுமை, பிளாக் மெயில் ஆகியவற்றால் விரக்தியடைந்த 2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உள்ளூரைச் சேர்ந்த மஹிபால் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவர் அங்குள்ள இ-மித்ரா சேவை மைய ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். அவர் தன்னுடன் பழகிய இளம் பெண்ணின் ஆபாச வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்தார்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி பிளாக் மெயில் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் மட்டும் அல்லாமல் அவரது நண்பர்களும் இளம் பெண்ணை மிரட்டி சுமார் 4 ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு பிளாக் மெயில் செய்து பணமும் பறித்துள்ளனர். பல ஆண்டுகளாக நீடித்த இந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த இளம்பெண் கடந்த மார்ச் 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து இளம் பெண்ணின் சகோதரி போலீஸில் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி புகார் அளித்தார். தனது சகோதரியின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் தானும் தற்கொலை செய்து கொள்வேன் என அவர் போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தார். எனினும் போலீஸார், உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதனால் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் புகார் அளித்த சகோதரிக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். தற்கொலை செய்த பெண்ணின் வீடியோக்களை பொதுவில் வெளியிடுவோம் என கூறி அவரது சகோதரிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதனால் அந்தப் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் ஜோத்பூரில் ராஜ் புத் சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பிரேத பரிசோதனை நடைபெற்ற மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து ஜோத்பூர் எஸ்.பி. நித்யா அளித்த பேட்டியில், ”முக்கிய குற்றவாளி மஹிபால் உட்பட 2 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவர். பாலியல் வன்கொடுமை புகாருக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

More Stories
ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாள்: பிரதமர் உட்பட தலைவர்கள் மரியாதை
உள்நாட்டில் 100 நாளில் தயாரிக்கப்பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி சோதனைகள் வெற்றி
“மைலேஜ் குறைந்துவிட்டது” – E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்