June 7, 2026

அண்ணாமலையின் புதிய இயக்கத்தை வரவேற்று திருப்பூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்

முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பா.ஜ.க.விலிருந்து விலகி இன்று வீத லீடர்ஸ் என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் திருப்பூரில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்து பலர் இணைந்து வருகிறார்கள் மேலும் இந்த புதிய இயக்கத்தை வரவேற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று கூடி முழக்கங்கள் எழுப்பினர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையின் ஆதரவாளர்கள், “பா.ஜ.க.வில் அவருடன் இணைந்து பணியாற்றிய நாங்கள், அவர் கட்சியிலிருந்து விலகியதும் நாங்களும் விலகிவிட்டோம். தற்போது அனைவரும் அவரது புதிய இயக்கத்தில் இணைந்துள்ளோம். எதிர்காலத்தில் அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அதிலும் அவருடன் இணைந்து பணியாற்றுவோம்” என்றனர்.மேலும், “திருப்பூரில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த இயக்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். பா.ஜ.க. அண்ணாமலையின் உழைப்பையும் பங்களிப்பையும் மதிக்கத் தவறிவிட்டது. அவருக்கு உரிய மதிப்பு அளிக்கப்படாத காரணத்தால்தான் அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவரைத் தொடர்ந்து நாங்களும் வெளியேறியுள்ளோம். இன்னும் சில நாட்களில் பல நிர்வாகிகளும் இந்த இயக்கத்தில் இணைய உள்ளனர்” என்று தெரிவித்தனர்.

Spread the love