August 17, 2026

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி!

டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் வங்​கதேச அணி 9 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன்​மூலம் ஆஸ்​திரேலி​யாவை அதன் சொந்த மண்​ணில் வீழ்த்தி வரலாற்று வெற்​றியை வங்​கதேச அணி பதிவு செய்​துள்​ளது.

2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடு​வதற்​காக வங்​கதேச அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து வரு​கிறது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி கடந்த 13-ம் தேதி டார்​வினிலுள்ள மராரா மைதானத்​தில் தொடங்​கியது.

ஆஸ்​திரேலியா முதல் இன்​னிங்​ஸில் 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஸ்டீவன் ஸ்மித் 71 ரன்​கள் எடுத்​தார். வங்​கதேச வீரர் ஹசன் மஹ்மூத் அபார​மாக பந்​து​வீசி 6 விக்​கெட்​களைச் சாய்த்​தார்.

இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 138 ஓவர்​களில் 426 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தன்​ஸித் ஹசன் தமீம் 101 ரன்​களும், கேப்​டன் நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 84 ரன்​களும், மெஹிதி ஹசன் மிராஸ் 65 ரன்களும் சேர்த்​தனர். இதைத் தொடர்ந்து முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 228 ரன்​கள் முன்​னிலை பெற்​றது.

இதன் பின்​னர் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 3-ம் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 53 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு

161 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்​றைய 4-ம் நாள் ஆட்​டத்தை கேமரூன் கிரீன் 43 ரன்​களு​ட​னும், அலெக்ஸ் கேரி 19 ரன்​களு​ட​னும் தொடங்​கினர்.

அலெக்ஸ் கேரி 30 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். பியூ வெப்​ஸ்​டர் 5, பாட் கம்​மின்ஸ் 8, மிட்​செல் ஸ்டார்க் 18, நேதன் லயன் 15 ரன்​கள் சேர்த்​தனர்.

ஒரு​முனை​யில் விக்​கெட்​கள் விழுந்​தா​லும் கேமரூன் கிரீன் நிலைத்து நின்று விளை​யாடி சதமடித்​தார். அவர் 201 பந்​துகளில் 104 ரன்​கள் (4 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்) எடுத்து ஆட்​ட​மிழந்​தார். மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத் ஆகியோரின் அபார பந்​து​வீச்சு காரண​மாக ஆஸ்​திரேலிய அணி, 2-ம் இன்​னிங்​ஸில் 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

2-வது இன்​னிங்​ஸின்​போது மெஹிதி ஹசன் 5 விக்​கெட்​களை​யும், ஹசன் மஹ்மூத் 3 விக்​கெட்​களை​யும், தஸ்​கின் அகமது, தைஜுல் இஸ்​லாம் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

இதைத் தொடர்ந்து 57 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் வங்​கதேசம் தனது 2-வது இன்​னிங்ஸை தொடங்​கியது. தொடக்க ஆட்​டக்​காரர் தன்​ஸித் ஹசன் தமீம் ரன் கணக்​கைத் தொடங்​காமலேயே ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து 2-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த ஷத்​மன் இஸ்​லா​மும், மோமினுல் ஹக்​கும் சிறப்​பாக விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர். 14.2 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 57 ரன்​கள் எடுத்து வரலாற்று வெற்​றியை வங்​கதேச அணி பெற்​றது.

ஷத்​மன் இஸ்​லாம் 25, மோமினுல் ஹக் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இதைத் தொடர்ந்து 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வங்​கதேச அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது.

2-வது டெஸ்ட்

இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி மெக்கே நகரிலுள்ள கிரேட் பேரியர் ரீஃப் அரீனா மைதானத்​தில் தொடங்​க​வுள்​ளது.

ஆட்ட நாயகன் மஹ்மூத் தேர்வு

இந்த ஆட்​டத்​தில் முதல் இன்​னிங்​ஸில் 6 மற்​றும் இரண்​டாவது இன்​னிங்​ஸில் 3 என மொத்​தம் 9 விக்​கெட்​களை கைப்​பற்​றிய வங்​கதேச பந்து வீச்​சாளர் ஹசன் மஹ்மூத் ஆட்ட நாயகன் விருதை வென்​றார்.

ஆஸ்​திரேலிய மண்​ணில் முதல் வெற்றி

ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் வங்​கதேச அணி, ஆஸ்​திரேலிய மண்​ணில் முதல் வெற்​றியை இந்த ஆட்​டம் மூலம் பதிவு செய்து வரலாறு படைத்​துள்​ளது.

கடந்த 31 ஆண்​டு​களில் இந்​திய கிரிக்​கெட் அணி நீங்​கலாக ஆசிய அணி ஒன்​றிடம் ஆஸ்​திரேலிய அணி அதன் சொந்த மண்​ணில் டெஸ்ட் போட்​டி​யில் தோல்வி அடைந்​துள்​ளது இதுவே முதல் முறை​யாகும்.

இந்​தப் போட்​டி​யில் 9 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி, டெஸ்ட் போட்​டிகளில் பெற்​றுள்ள 2-வது மிகப்​பெரிய வெற்​றி​யாகும் இது. இதற்கு முன்பு ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணியை 10 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வங்​கதேசம் வீழ்த்​தி​யிருந்​ததே மிகப்​பெரிய வெற்​றி​யாக உள்​ளது.

மேலும், சேனா நாடு​களுக்கு (தென் ஆப்​பிரிக்​கா, இங்​கிலாந்​து, நியூஸிலாந்​து, ஆஸ்​திரேலி​யா) எதி​ரான டெஸ்ட் போட்​டிகளில் 2-வது வெற்​றியை வங்​கதேச அணி பெற்​றுள்​ளது.

இதற்கு முன்பு 2022-ல் மவுண்ட் மவுங்​க​னி​யில் நடை​பெற்ற போட்​டி​யில் நியூஸிலாந்தை வங்​கதேச அணி வென்​றிருந்​தது. அது​மட்​டுமல்​லாமல் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக 2-வது டெஸ்ட் போட்​டி​யில் வங்​கதேசம் வெற்றி கண்​டுள்​ளது. இதற்கு முன்பு ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக 2017-ல் மிர்​பூரில் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் வங்​கதேசம் வெற்றி கண்​டிருந்​தது.

Spread the love