August 1, 2026

கேரள கனமழைக்கு 6 பேர் உயிரிழப்பு; 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

முதல் கேரளாவின் பல மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகிலுள்ள குடயத்தூர் அதுர்மலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு மண்ணில் புதையுண்டதில் சுமதி என்பவர் உயிரிழந்தார்.

வயநாட்டில் மின்சாரம் தாக்கி ஒருவரும், மலப்புரத்தில் ஓடையில் சிக்கி நான்கு வயது சிறுவனும் உயிரிழந்தனர். இதனால் கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

கேரள கனமழை, நிலச்சரிவு மற்றும் மண் சரிவு நிலவரம் குறித்து முதல்வர் வி.டி.சதீசன், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார்.

கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தவொரு அவசர சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் சதீசன் அறிவுத்தினார்.

மேலும், கனமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறை மற்றும் அரசுத் துறைகள் தயாராக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ள கேரள அரசு, தொடர்பு எண்களையும் அறிவித்துள்ளது.

திருச்சூர் மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேரளாவில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருவதால் அதிகாரிகள் வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

தொடுபுழா அருகிலுள்ள மூவாற்றுப்புழா ஆறு, புனலூரில் உள்ள கல்லடா ஆறு, பாலாவில் உள்ள மீனாச்சில் ஆறு மற்றும் மணிமலை ஆறு, பம்பை ஆறு ஆகியவற்றில் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், நீர்வளத் துறை இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Spread the love