சென்னை: புதிதாக அமல்படுத்தப்பட்ட டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாணவர்களின் மதிப்பெண் குறைவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தங்கள் மதிப்பெண்கள் குறித்து மிகுந்த வருத்தத்துடன் இருப்பதாகவும், அதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையே காரணம் என்று கருதுவதாகவும் சமூக வலைதளங்கள் வழியாக தகவல்கள் வருகின்றன.
மாணவர்கள் நலனில் சிபிஎஸ்இ எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் விடைத்தாள் திருத்தம் நடைமுறையானது, அனுபவமிக்க ஆசிரியர்கள் தயாரித்த மதிப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில், ஒரே மாதிரியான மற்றும் சீரான மதிப்பீட்டை உறுதிசெய்யும்.
மேலும் அந்த மதிப்பீட்டில் மாற்று முறைகளில் எழுதப்பட்ட பதில்களுக்கும், மதிப்பெண் பெறும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் மாணவர்களுக்கு தங்கள் தேர்வு முடிவில், திருப்தி இல்லையெனில், மறுகூட்டல், திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிடுதல் மற்றும் மறுமதிப்பீடு கோரலாம்.
தேர்வு முடிவுகள் தொடர்பாக, கவலை அடைந்துள்ள மாணவர்களுக்கு இலவச ஆலோசனை சேவையும் 1800-11-8004 என்ற தொலைபேசி வழியாக வழங்கப்படுகிறது. மேலும் resultcbse2026@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
இதுவரை 90 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அரசுக் கல்லூரிகளில் சேர மே 29-ம் தேதி கடைசி
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டும்