September 10, 2026

திருப்பூர் அண்ணாநகரில் சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா.. பெண்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு 

செப் 10

திருப்பூர் அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ சுடலை மகாராஜா கோவிலின் 20-ஆம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.திருப்பூர் அண்ணாநகர் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ சுடலை மகாராஜா கோவிலில், 20-ஆம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த மூன்று நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கும்மியடித்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மேலும், கம்பம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து, சுடலை மகாராஜா, ராஜகாளியம்மன், பத்ரகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன் மற்றும் பிரம்மசக்தி அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தனர்.பின்னர், கோவில் பூசாரி சுரேஷ் சாமிகள் சுடலை மகாராஜா முன்னிலையில் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன், கிடாய் வெட்டப்பட்டு அசைவ அன்னதானமும் வழங்கப்பட்டது.

Spread the love