ராஜபாளையம்: பொங்கல் சேலை உற்பத்திக்கு 3 மாதங்களாக நூல் வழங்காமல் நெசவாளர்களை பட்டினி போடும் தமிழக அரசு மற்றும் கைத்தறி துறையை கண்டித்து சிஐடியு பெடல் தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையம் அருகே சேத்தூரில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் சேலைகள் விருதுநகர் மாவட்டத்தில் 29 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பெடல் தறிகளில் நெசவு செய்யப்பட்டு வருகிறது. இலவச சேலையில் புதிய ரகத்தை அமல்படுத்துவதால் 3 மாதங்களுக்கு மேலாக இலவச சேலை உற்பத்தி செய்வதற்கு நூல் வழங்கப்படாததால் நெசவாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
சேலை நெசவு செய்ய உடனடியாக நூல் வழங்க கோரியும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள இலவச சேலைகளை கொள்முதல் செய்ய கோரியும், நெசவாளர்களை பட்டினி போடும் தமிழக அரசு மற்றும் கைத்தறி துறையை கண்டித்து ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு நெசவாளர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் திருமலை, கைத்தறி சங்க மாவட்ட பொது செயலாளர் ராமர், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன் மற்றும் நெசவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய விருதுநகர் மாவட்ட கைத்தறி துறை கண்காணிப்பாளர் சாமிநாதன், புதிய ரக உற்பத்திக்கு தறியில் அச்சு மாற்றுவதற்கு தறி ஒன்று ரூ.5,000 வீதம் உடனடியாக கூட்டுறவு சங்கங்களில் வழங்கவும், கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள துணிகளை தீபாவளிக்குள் கொள்முதல் செய்துவிடுவதாகவும் உறுதி உறுதியளித்தார்.
இருப்பினும், தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரந்து நடைபெறும் என கூறிய நெசவாளர்கள், தற்காலிகமாக முடித்துக்கொண்டனர்.

More Stories
செங்கல்பட்டு ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா
அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி
கொளத்தூரில் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு