சென்னை: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் கூறியதாவது: சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாகப் பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையிலும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், எளிதாக பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் வகையிலும் சென்னை மாநகரின் பல பகுதிகளில் பொதுக் கழிப்பிட மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,479 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 10,444 கழிப்பிட இருக்கைகள் அமைத்திடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில், 853 இடங்களில் 7644 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 193 இடங்களில் 1270 இருக்கைகளுடன் கழிப்பறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், 433 இடங்களில் 1530 இருக்கைகளுடன் ஒப்பனை அறைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளிலும், மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் முறையான களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பு, காற்றோட்டம், வெளிச்சம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுடனும் இந்தக் கழிப்பிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, அட்டவணையின்படி தொடர்ந்து சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கையுறை, முகக்கவசம், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்குப் பாதுகாப்பு நடைமுறைகள், ரசாயனங்களை முறையாக கையாளுதல், தனிப்பட்ட சுகாதாரம் குறித்தும் தொடர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.மேலும், இந்தக் கழிப்பிடங்களில் மக்களின் கருத்துகளைப் பெறவும், குறைகள் இருப்பின் அவற்றை விரைந்து நிவர்த்தி செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More Stories
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா: முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்
திருவண்ணாமலை தீப விழா: தரிசனத்துக்கு பக்தர்கள் வரம்பு!