சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக இன்று (1.9.2026) சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மேட்டூர் அணையை திறப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து காமாலபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்கவும், மலர்களைத் தூவியும் அவருக்கு வரவேபு அளிக்கப்பட்டது.
சேலம் மேச்சேரி பகுதியில் இருந்து முதல்வர் விஜய் திறந்த வேனில் நின்றபடி, கூடியிருக்கும் மக்களைப் பார்த்து கையசைத்தார். பொதுமக்களும், தவெகவினரும் திரளாக கூடி அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
மேட்டூர் அணை திறப்பு: மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி 12 மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு உதவியாக ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். நடப்பாண்டில் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை.
கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வத்து அதிகரித்தது. பின்னர், கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், இன்று (1-ம் தேதி) முதல் 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படவுள்ளது. இதன்படி முதல்வர் விஜய் முதல் முறையாக தண்ணீர் திறந்து வைக்கிறார்.
டெல்டா பாசன நீர் திறப்புக்கு உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 20 முறையும், ஜூன் மாதத்துக்கு முன்பாக 11 முறையும் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், காலதாமதமாக 62-வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. அணையில் 85 முதல் 90 அடி வரை தண்ணீர் இருக்கும் போது 8 முறை திறக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை முழுமையாக 29 முறை திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் தண்ணீர் திறப்பது இது 4-வது முறையாகும். இதனிடையே அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10,485 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 11,501 கன அடியாக உயர்ந்தது. 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 91.15 அடியாக உள்ளது.

More Stories
சூரியனை சுற்றி திடீரென ஒளிவட்டம்: ஆர்வமுடன் படம் பிடித்த கடலூர், புதுவை மக்கள்
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் – முதல்வர் விஜய் புகழ் வணக்கம்
52 கோயில்களில் இன்று முதல் கைப்பேசிக்கு தடை! கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்து செல்ல ரூ.5 கட்டணம்