ஓசூர்: மேகேதாட்டுவில் அணைகட்ட வலியுறுத்தி அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் இன்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கன்னட அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
அதனையொட்டி இன்று கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
அப்போது, கன்னட அமைப்பான கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியிருந்து பேரணியாக வந்து கர்நாடக நுழைவுப் பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது தமிழக எல்லையான ஜூஜூவாடியில் தமிழக பேருந்துகள் மற்றும் கார், லாரிகளை தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது பெங்களூருவுக்கு பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் தமிழக எல்லையிருந்து கர்நாடக மாநிலத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து ஆட்டோவில் அத்திப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து பெங்களூரு சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கன்னட அமைப்பினரை கர்நாடக போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனையடுத்து ஜூஜூவாடியில் நிறுத்தப்பட்ட. தமிழக பேருந்துகள் உள்ளிட்ட.வாகனங்கள் சுமார் 15 நிமிடங்கள் கழித்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல அனுமதித்தனர்.
இதுகுறித்து தமிழக போலீஸார், “கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் முழு அடைப்புப் போராட்டம் அறிவித்திருந்தாலும் தமிழக பேருந்துகள் வழக்கமாகச் சென்று வருகின்றன. மாநில எலையில் கன்னட அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் போது மட்டும் தமிழக பேருந்துகளை நிறுத்தி வைக்கிறோம். ஆர்பாட்டம் முடிந்த பின்னர் மீண்டும் பேருந்துகளை இயக்க அனுமதிக்கிறோம். பாதுகாப்பு கருதி இருமாநில எல்லையிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்” எனக் கூறினர்.

More Stories
தமிழகம் முழுவதும் வார விடுமுறையை முன்னிட்டு 2,120 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
“சாதிவாரி கணக்கெடுப்பில் தெலங்கானா மாதிரியை பின்பற்றுக” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் யோசனை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு