மயிலாடுதுறை: சவுதி அரேபியாவில் தங்கி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர், ஈரானிய கடற்கொள்ளையர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். மேலும் 3 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாய் சுனாமி நகரைச் சேர்ந்த மாவீரன்(40), கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர்(39), திருமுல்லைவாசலைச் சேர்ந்த பால்ராஜ்(40), கடலூர் மாவட்டம் சொத்திக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன்(21) ஆகியோர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரானிய கடற்கொள்ளையர் அவர்களின் படகில் கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கடற்கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குண்டு பாய்ந்ததில் சங்கர் படுகாயமடைந்தார். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த சவுதி அரேபிய கடற்படையினர் 3 மீனவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மாவீரனின் உயிரிழப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத் துறையினர், திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவீரனுக்கு நீலவேணி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியாவில் மீன்பிடித்து வந்த மாவீரன், 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் சவுதி சென்றுள்ளார்.
மாவீரனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? – திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு
கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை
செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு அல் கொய்தாவின் துணை அமைப்பே காரணம்: ஐநா அறிவிப்பு