August 25, 2026

டெல்லியில் கனமழை: பல பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்; விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக அங்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஆக.25 – செவ்வாய்க்கிழமை) அதிகாலை மற்றும் காலை நேரத்தில் தலைநகர் பகுதியில் கனமழை பொழிவு பதிவானது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நகரின் முக்கிய இடங்களான எய்ம்ஸ், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, அசோகா சாலை பகுதி, உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள பகுதி, பாபா கரக் சிங் மார்க், அதன் அருகே உள்ள கன்னாட் பிளேஸ், ஆர்.கே புரம், பெரோஸ் ஷா சாலை, ஐ.டி.ஓ ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கிய காரணத்தால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

நேற்றும் (திங்கள்கிழமை) டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது இதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பெரும்பாலான வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்ற காட்சிகள் சமூக வலைதள பதிவுகளில் பகிரப்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், இமாச்சலிலும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.

விமான சேவை பாதிப்பு

இடி மின்னலுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசிய மோசமான வானிலை காரணத்தால் டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்து குறித்த தகவலை அளிக்கும் ஃபிளைட் ரேடார் தளம் அளித்துள்ள தகவலின் படி டெல்லி விமான நிலையத்தில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 160 விமானங்கள் தாமதத்தை எதிர்கொண்டுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை தொடரும்

வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள அண்மைய தகவலின்படி டெல்லியில் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Spread the love