September 5, 2026

நவம்பர் மாதம் முதல் கோயம்பேடு-நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ​ரயில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் இடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் நவம்பரில் இருந்து தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் சுமார் 26 கி.மீ நீளமுள்ள கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வரை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த பாதையில் கிட்டத்தட்ட 90 சதவீத தண்டவாள பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 1.5 கி.மீ பணிகளை கோயம்பேடு நிலையம், முகலிவாக்கம் மற்றும் ஈரடுக்கு பாதையில் சிறு சிறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை அடுத்த 10 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால் கோயம்பேடு – நந்தம்பாக்கம் இடையே, வரும் நவம்பரில் சோதனை ஓட்டத்தை தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறுகையில், ‘கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டம், வணிக ரீதியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு சுமார் 4 மாதங்கள் வரை நீடிக்கும்.

மேலும் இந்த வழித்தடத்தில் அதிநவீன ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு மென்பொருள் ரயில்களில் பொருத்தப்பட்டு தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை ​வர்த்தக மையம் மற்றும் ஆலந்தூர் இடையிலான 3.6 கி.மீ இணைப்பு பணிகள் இன்னும் 45 முதல் 60 நாட்களில் முடிக்கப்படும். இதனால் கோயம்பேடு – ஆலந்தூர் இடையிலான முழு வழித்தட பயன்பாடு அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,’ என்றார்.

Spread the love